முதல்வர் மு.க.ஸ்டாலின் “இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48” திட்டத்தின் கீழ் இன்று 188 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்தார். “இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48” என்ற புதிய திட்டம் சாலை விபத்தில் சிக்குவோரை காக்க உதவும் திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் முதல் 48 மணி நேர அவசர மருத்துவ சிகிச்சை செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த புதிய திட்டத்திற்கு பயன்படுத்தும் வகையில் மக்கள் பயன்பாட்டிற்காக 188 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தமிழகத்தில் தற்போது ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடி சென்று பெட்டகம் வழங்கியுள்ளார். அதாவது செங்கல்பட்டை சேர்ந்த பாஞ்சாலி என்ற 68 வயது மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்து, பின்னர் மருந்து பெட்டகத்தை வழங்கியுள்ளார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முதல்வர் உடனிருந்தனர்.