தீபாவளி என்பதால் பணம் அல்லது மது வேண்டும் என்று தகராறு செய்து இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கௌதம். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவர் தீபாவளி அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே சென்ற சமயம் மூன்று இளைஞர்கள் கௌதமை மடக்கி அவரிடம் பணம் இருக்கிறதா என கேட்டு தகராறு செய்துள்ளனர். கௌதம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் இன்று தீபாவளி எங்களுக்கு பணம் வேண்டும் அல்லது மது வாங்கி கொடு என தொல்லை செய்துள்ளனர்.
கௌதம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு வீட்டிற்குள் செல்ல முயற்சித்ததால் மூன்று பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் கடுமையாக அவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கௌதம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 தையல்கள் போடப்பட்டு பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஆர்ஆர் நகர் பகுதியை சேர்ந்த விமல், சுரேஷ், ஜான்சன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.