இன்று மாலையுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணி நிறைவு பெறுவதாக பிரான்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலமாக ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பணி வருகின்ற 31-ஆம் தேதியோடு நிறைவுபெறும் என்று அறிவித்துள்ளது.
அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றவும், வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கவும் அனுமதிக்க முடியாது என்று தலிபான் பயங்கரவாதிகள் தரப்பிலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாடு தகுதியுள்ள ஆப்கான் மக்களையும், ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணி ஆகஸ்ட் 27 அன்று நிறைவு பெறுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு காபூலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியினை தொடர முடியாது என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் அரசு மீட்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முதல் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 2,000 பேரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 100 பேரும் ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் விமானப் படை மூலம் மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.