ஊட்டி மலை ரயிலில் இன்று (மே 1) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சுற்றுலாப்பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டியில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களான ஊட்டி மலை ரயில் பொம்மை, ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்டபெட்டா சிகரம், டால்ஃபின் மூக்கு, எமரால்டு ஏரி, புலி மலை, கோத்தகிரி, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் அண்ணமலை கோவில் உள்ளிட்ட ஏராளமான இடங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கோடை விடுமுறையை கொண்டாட முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வந்தனர். தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதனால் பொருளாதார பாதிப்பில் சிக்கித் தவித்த சுற்றுலா தளங்களின் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஊட்டி மலை ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு முன்பு இயக்கபட்டதைப் போல இன்று முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஊட்டி முதல் குன்னூர் செல்லும் ரயில் (06140) உதகையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்படும். அதனைப்போலவே குன்னூரில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் ரயில் எண் (06141) ஊட்டியில் மதியம் 12.15 மணிக்கு புறப்படும். அதில் இரண்டு பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகள் மே 4ஆம் தேதி முதல் இணைக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.