Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு 11:30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கே  நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 160 கிலோமீட்டர் கிழக்கு – தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் சற்று வலு குறைந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடையும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு சென்றடையும். இதன் காரணமாக தமிழகத்திற்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களிலும் இது மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும்  காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதிகள் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படும். அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |