தனது பெண்ணுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண் முன்னே பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்ற பகுதியில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 45 வயதுடைய வனிதா என்ற மனைவியும், 24 வயதுடைய ஜமுனா என்ற மகளும் இருக்கின்றனர். அவர் கர்நாடக மாநில பெங்களூர் மாதேவபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதனால் அப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் ஜமுனா மற்றும் அவரின் தாயார் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜமுனாவுக்கும்,திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் என்று திருமண நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக பெங்களூருவிலிருந்து ஜமுனா மற்றும் அவரின் தாயார் திருப்பத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றுள்ளனர். ஓசூர் அருகே குமுத பள்ளி என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது அவர்கள் சென்ற வாகனம் மோதி உள்ளது.
அந்தக் கொடூர விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜமுனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தாயாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுபற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதுமட்டுமன்றி விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.