இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். தற்போது இவர் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் டி.இமான் தனது தாய் இறந்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இன்று (மே 25) என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவரின் பிறந்த நாளைக்கு (மே 23) பிறகு இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது . அவர் கோமா நிலையில் இருந்தார். மருத்துவமனை ஐ.சி.யு-வில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் முன்பு ஒரு கேக்கை வெட்டினேன்.
https://twitter.com/immancomposer/status/1396996522449850369
எங்கள் இருவருக்குமே தெரியாது அதுதான் என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்து என்று. எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு அவர் விரைவில் திரும்பி வருவார் என பலமான நம்பிக்கை இருந்தது. ஆனால் 2008, மே 25-ஆம் தேதி அவர் சொர்க்கத்திற்கு சென்று விட்டார். நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.