மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினால் தான் மருத்துவம் படிக்க முடியும். கடந்த 2017 ஆம் வருடம் முதலே நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் 2017 ஆம் வருடம் நீட்டுக்கு எதிராக போராடினார் மாணவி அனிதா. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் போராடி வந்தார்.
உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் செய்தும் பலன் கிடைக்காமல் போனதால் அவருடைய மருத்துவ கனவு கலைந்தது. இதை தாங்கிக்கொள்ள முடியாது அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அனிதாவின் பிறகும் 17 மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக உயிரிழந்தனர். இருப்பினும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இதையடுத்து இன்று அனிதாவின் 21வது பிறந்த நாள் என்பதால் திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் அனிதாவை பற்றி பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்கப் புறப்பட்ட தங்கை அனிதாவின் 21 வது பிறந்தநாள் இன்று. நீட் தேர்வாலும், அதை திணித்தவர்களாலும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க நீட் இல்லா தமிழகம் அமைக்க அடிமைகள் பாசிஸ்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.