சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1,173 அதிகரித்துள்ளது. இதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகளவாக இன்று திருப்பூரில் 18 பேருக்கும், கரூரில் 15 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இன்று சென்னையில் புதிதாக 9 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 199ல் இருந்து 208ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது..