உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இத்தினம் உருவாக காரணமாக இருப்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஆவார். இவர் தனது இளம் வயதிலேயே பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் பெண்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அவர் வழக்கறிஞரானார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக பதவி வகித்தார்.
அந்த காலகட்டத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் கூட பாரிஸ் நகரில் 15 ஆயிரம் பெண்களை திரட்டி பேரணியை கிளாரா ஜெட்கின் நடத்தினார். இதில் பெண்களுக்கு சம உரிமை, ஊதிய உயர்வு, நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது. இதன் காரணமாக கிளாரா ஜெட்கின் புகழானது உலகெங்கிலும் பரவ தொடங்கியது. அதன்பின் 1910ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் “சர்வதேச பெண்கள் மாநாடு” நடைபெற்றது. இதில் கிளாரா ஜெட்கின் உட்பட 17 நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்று கிளாரா ஆலோசனை வழங்கினார்.
மேலும் இந்ததினம் கொண்டாடப்படுவதற்கான முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் 1911ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதன் முதலாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் 1913ஆம் வருடம் மார்ச் 8ம் தேதி பெண்களுக்கான வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தினத்தை நினைவுபடுத்தும் வகையில் மார்ச் 8ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது