சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் வைத்து நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல, மகரவிளக்கு சீசன் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான மந்திரி கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, 17-ஆம் தேதி அதிகாலை முதல் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். இதனையடுத்து 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு அடுத்து டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும்.
இதனையடுத்து அன்று இரவு நடை அடைக்கப்படும் நடை டிசம்பர் மாதம் 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இந்நிலையில் நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படும். வழக்கம்போல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம் எனவும், முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் உள்பட 12 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.