கர்நாடக மாநிலத்தில் அரசு வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனைத்தும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “திரையரங்குகளை சானிடைசர் மூலமாக அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திரையரங்குக்கு வருகிற மக்கள் அனைவருக்கும் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அனுமதிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திரையரங்கு நுழைவு வாயில் பகுதியில் கட்டாயம் சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். திரையரங்குகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்து, தின்பண்டங்கள் அனைத்தும் மூடப்பட்ட பட்டங்கள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும்” என்று அரசு தெரிவித்துள்ளது.அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கர்நாடக மாநிலத்தில் இன்று திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.