புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார்.
இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அமலுக்கு வந்தது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில்லை என எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.