இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்து இருக்கின்றனர். ஆனால் மக்களின் சிரமம் சீக்கிரம் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. அது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
இந்த நிலையில் இலங்கையில் இரண்டு மாதங்கள் 3வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ரூபாய் 50 அதிகரித்து, லிட்டர் 470 ஆகவும் டீசல் 60 அதிகரித்து லிட்டர் 460 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்து இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் நிறுவனமும் இலங்கை-இந்திய என்ணெய் நிறுவனமும் இந்த விலை உயர்வை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி தாமதத்தினால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்க்காக திங்கட்கிழமை முதல் டோக்கன் முறை அமலுக்கு கொண்டு வரப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகரா நேற்று கூறியுள்ளார். வங்கி நடைமுறை மற்றும் கொண்டுவருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த வாரமும் அடுத்த வாரமும் வரவேண்டிய பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த வாரம் வரை பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.