இன்று முதல் தென்காசி வழியாக நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.
தீபாவளி, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம், தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர். நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7:20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு கட்டண ரயில்(06004) நாளை காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். வருகிற ஜனவரி மாதம் 29-ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்படும் தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரயில்(06003) மறுநாள் காலை 10:40 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை திண்டுக்கல் திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்கிறது. கடந்த 3 மாதங்களில் இந்த சிறப்பு ரயில்கள் மூலமாக 2.5 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.