1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. முதல் நாளில் இருந்தே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்க கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அதற்கு நேரம் ஒதுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் தொடங்கிய முதல் ஒரு வாரத்துக்கு பாடத்திட்டங்களை நடத்தாமல், புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான பணிகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்கின்றன. இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே அதனை மாணவ-மாணவிகளுக்கு வழங்க பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு உள்ளன.
கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்பட இருக்கின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, அவர்கள் முககவசம் அணிந்து வருவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.