சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வணிக சாலைகளில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சென்னை கொத்தவால் சாவடியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்திய நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அங்குள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கொத்தவால்சாவடி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்கு தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் உள்ளிட்டவை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அங்குள்ள மொத்த வியாபார கடைகள், சில்லறை வியாபாரக் கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
ஏற்கனவே ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் ரோடு, ராயபுரம், அமைந்தகரை, புரசைவாக்கம், ரெட் ஹில்ஸ், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட மிக முக்கியமான வணிகப் பகுதிகளில் நேற்று தொடங்கி வருகின்ற 9ஆம் தேதி காலை 6 மணி வரை கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.