காணாமல் போன சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர் . ஆனால் சிறுமி படிக்காமல் இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த சிறுமி செல்போனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் தோழியை கண்டுபிடித்து சிறுமியிடம் பேச வைத்துள்ளனர். அதில் அவர் சென்னை-கோவை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை அரக்கோணம் காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர் . இந்நிலையில் அரக்கோணம் காவல்துறையினர் ரயில் நிலையத்திற்கு வந்து அந்த சிறுமியை மீட்டு விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பெற்றோர் கண்டித்ததால் அவர் சென்னையில் உள்ள தனது தோழியுடன் தங்கி படிக்க சென்றது தெரியவந்துள்ளது.