நர்சிங் மாணவி திடீரென இரயிலில் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் சபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியுடன் பெங்களூருவில் இருக்கும் ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் சபீனாவும் அவரது சகோதரியும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரயிலில் வந்துள்ளனர். அப்போது ரயில் கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது திடீரென சபினா காணாமல் போய்விட்டார். அவரது சகோதரி சபீனாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் சபீனா புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளக்குடிபட்டியில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் வெள்ளைக்குடிபட்டிக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சபினா, அருண்குமார் என்பவருடைய வீட்டில் இருந்துள்ளார். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இணையதளம் மூலமாக சபீனாவும், அருண்குமாரும் 6 மாதமாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சபினா தன்னுடைய காதலனை கரூர் ரயில் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். அதன்பிறகு இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதன்பிறகு இவர்கள் 2 பேரையும் நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சபீனாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தபட்டது. ஆனால் சபீனா தன்னுடைய காதலனுடன் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே காவல்துறையினர் சபீனாவை அவருடைய காதல் கணவரான அருண்குமாருடன் அனுப்பி வைத்தனர்.