இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததுள்ளது. இந்த செல்போன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. மாணவர்கள் படிக்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரமும் செல்போனை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய புகைப்படத்தை பதிவிடுது, ரீல்ஸ் வீடியோ போடுவது என்று ஆபத்தை உணராமல் செயல்படுகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் மீனாட்சி தம்பதியினரின் 16 வயது மகள் சதீஷ்குமார் என்ற வாலிபருடன் கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். அதோடு சிறுமி வாலிபரை நேரில் சந்தித்து பல இடங்களுக்கும் சுற்றியுள்ளார். இந்த பழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட சதீஷ்குமார் சிறுமியிடம் இருந்து அவ்வப்போது தங்க நகைகளை வாங்கி அதை விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்க்கும் போது அதிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதன் மொத்த மதிப்பு 18 லட்ச ரூபாய் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் விசாரணை செய்ததில் சதீஷ்குமாரிடம் தங்க நகைகளை கொடுத்தது தெரிய வந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில் இன்ஸ்டாகிராமில் என்னுடைய மகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட வாலிபர் அவரை மிரட்டி 60 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.