லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் பட்டாசு ஆலைகளில் லஞ்சம் கேட்டதாக பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 29ஆம் தேதி கருப்பையா வசிக்கும் குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் பணம் மற்றும் பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து கருப்பையாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பசாமி தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனை மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கருப்பையாவின் மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் நகை பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.