இம்மாதம் 24-ஆம் நாள் வரை ஏற்கனவே இ-பாஸ் பெற்று வைத்திருந்தவர்கள் தற்போது பயணம் செய்வதால் வண்டி தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தீவிர ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் நேற்று முதல் ஜூன் 1-ஆம் நாள் வரை ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் சுழற்சி முறையில் 20,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 40 மேம்பாலங்களில் 35 மேம்பாலங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி வெளியே வரும் வண்டி ஓட்டிகளுக்கு முதல்முறை எச்சரிக்கையும், இரண்டாம் முறை வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் ஊரடங்கு முடிந்த பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 10ஆம் நாள் முதல் 24 வரை அறிவிக்கப்பட்ட முதற்கட்ட ஊரடங்கின் போது பொதுமக்கள் பலரும் இ-பதிவு பெற்று பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வந்தனர். அந்த இ-பதிவுகள் நேற்று 24-ஆம் நாள் வரை செல்லுபடியாகும் என்றால் அதை வைத்து சென்னைக்குள் பொது மக்கள் பயணம் செய்கின்றனர். இதனால் தீவிர ஊரடங்கை நேற்று நடைமுறைப்படுத்துவதில் போலீசார் சிக்கலை சந்தித்தனர். இந்த தீவிர ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.