தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை நிகழ்வுகளோடு, மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி என்ற பெயரில் கஜானாவை காலி செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கொடுத்த புகார்கள் அனைத்தும் புழுகு மூட்டைகளின் மொத்த வடிவம் என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி புளுகு மூட்டைகளாக மனு கொடுத்துள்ளார். திமுக அரசின் மீது கொடுத்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் அற்றது. தற்போது அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நடந்து வருவதால் பாஜகவின் ஆதரவை பெரும் நோக்கில் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். உட்கட்சி பூசல்களை திசை திருப்பும் நோக்கம் மட்டும்தான் எடப்பாடியின் குறிக்கோள். சென்னையில் மழை நீர் தேங்காத அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததால் அவரை மக்கள் பாராட்டியது எடப்பாடிக்கு பொறுக்கவில்லை.
ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி எ;அளித்த புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் அவர் நீதிமன்றத்தையே அணுகி இருக்கலாம். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எடப்பாடி மாயாஜால தோற்றத்தை ஏற்படுத்துகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு மற்றும் பொள்ளாச்சி சம்பவங்கள் போன்றவைகள் யார் ஆட்சியில் நடந்தது என்பதை எடப்பாடி நினைக்க வேண்டும். அந்த சம்பவங்களின் போது மனசாட்சியே இல்லாமல் செயல்பட்டவர் தான் எடப்பாடி.
ஆறுமுகசாமி ஆணை அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசனின் அறிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியே சென்றார். மருந்து பற்றாக்குறை என்பது தமிழகத்தில் இல்லை. போதுமான அளவு உயிர்க்காக்கும் மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருந்து பற்றாக்குறை உள்ளது என்று எடப்பாடி கூறுவது பொய். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பொறுப்புடன் இருக்க வேண்டுமே தவிர இப்படி ஆதாரம் இல்லாத குற்றசாட்டுகளை கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.