ரம்ஜான் பண்டிகைக்கு வந்த வாலிபர் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் தாட்சாயினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சாரா என்பவரை ரம்ஜான் பண்டிகைகாக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் சாரா தனது நண்பரான சையத் முகமது அபுபக்கர் என்பவருடன் சேர்ந்து தாட்சாயணியின் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தாட்சாயணி தனது லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த தங்கம் மற்றும் வைர சங்கிலிகள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாட்சாயணி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டிற்கு பிரியாணி சாப்பிட வந்த சாரா மற்றும் சையத் முகமது அபுபக்கரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சையத் முகமது அபுபக்கர் நகைக்கு ஆசைப்பட்டு வைரம் மற்றும் தங்க சங்கிலியை திருடி பிரியாணியுடன் சேர்ந்து வாயில் போட்டு விழுங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் சையத் முகமது அபூபக்கரின் வயிற்றில் சங்கிலி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் இயற்கை உபாதை கழித்த போது தங்கம் மற்றும் வைர நகைகள் வெளியே வந்துள்ளது. அதனை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.