சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என மொத்தம் 220 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்காக 12 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இந்த பள்ளியில் மொத்தம் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் சூழல் நிலவுகிறது.
ஒரு கரும்பலகையை இரண்டாக பிரித்துக் கொண்டு இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். இப்படி ஒரே வகுப்பறையில் இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பொழுது மாணவர்களால் எப்படி கவனிக்க முடியும் என்பது பல்வேறு தரப்பினரும் கேள்வியாக உள்ளது. மேலும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு இடம் இல்லாததால் பள்ளியின் பின்புறமுள்ள சமையல் கூடத்தில் தரையில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. மற்றொரு வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பள்ளிக்கல்வித்துறை இதில் தலையிட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.