குஜராத்திலுள்ள பரோடா பகுதியில் ஷாமா பிந்து (24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்எஸ் பல்கலையில் சோஷியாலஜி பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷாமா தன்னைதானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயராகும். இவ்வாறு பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதன் முறையாக குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இத்திருமணத்திற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாமா பிந்து தன்முடிவை மாற்றினார். அதாவது “நான் யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கு விருப்பபடவில்லை. இதன் காரணமாக திருமண இடத்தை மாற்ற விரும்புகிறேன்.
எனினும் சோலோகேமி திருமணத்தை நிச்சயம் செய்வேன். இம்முடிவை யாருக்காகவும் விட்டுதர மாட்டேன்” என ஷாமா பிந்து தெரிவித்திருந்தார். அதன்படி திடீரென ஷாமாபிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்னதாக தன் வீட்டில் வைத்து தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார். அப்போது மெகந்தி, மஞ்சள்பூசும் விழா உட்பட அவரது பாரம்பரிய வழக்கபடி சடங்குகள் நடத்தப்பட்டது. அதன்பின் ஷாமாபிந்து தன் நெற்றியில் தனக்குத் தானே குங்குமமிட்டு, திருமணம் செய்து கொண்டார். இவ்விழாவில் அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்கள் என்று மொத்தம் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்க்கான மந்திரங்கள் டேப்ரெக்கார்ட் வாயிலாக இசைக்கப்பட்டது.
கழுத்தில் மாலை அணிந்து, நெற்றியில் குங்குமம்சூடி மணப்பெண்ணாக மாறி ஷாமா பிந்து தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக ஷாமா பிந்து கூறியதாவது “இறுதியாக நான் திருமணமான பெண்ணாக உணர்கிறேன். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திருமணம் நடைபெற கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அறிவித்த தேதியில் விழா நடத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று நினைத்து, 3 நாட்களுக்கு முன்னதாகவே தோழிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறினார். அத்துடன் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோலோகாமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானவர்கள் என் உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக திருமணத்துக்கு பின் கோவாவுக்கு ஹனிமூன் செல்ல இருக்கிறேன் என அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.