பெரம்பலூரில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நோவா நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தெரு மற்றும் வீடுகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள பகுதியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குடங்களுடன் கூட்டமாக வந்து நின்று தண்ணீரை பிடிக்க ஆரம்பித்தனர். இந்த கூட்டத்தால் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும், கொரோனா பரவாமல் இருப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரு மற்றும் வீட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.