கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மற்றொரு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்டர் பண்டிகை வரை நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் கடற்கரை, பூங்காக்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே கடந்த மார்ச் 29ஆம் தேதி பூங்காவில் மக்கள் குடித்துவிட்டு வந்ததால் கலவரங்கள் ஏற்பட்டன. இதனால் தற்போது பூங்காக்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மான்சிஸ்டர் சிட்டி சென்டரில் சட்டவிரோத விருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அது மட்டுமில்லாமல் அதிக மக்கள் கூடுவதால் பொது இடங்களில் குப்பைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஆடம்பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் வெகு நாட்களுக்கு பிறகு சந்தோசமாக ஒன்று கூடி வெளியே செல்வது அழகிய காட்சியாக உள்ளது. ஆனால் இது தொடர்ந்து நடைபெற்று வருவதால் தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக இடைவெளிகள் குறைவதால் தொற்றின் அபாயம் அதிகமாக இருக்கும் என்றும் இது அடுத்த கட்ட ஊரடங்கிற்கு காரணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.