உத்திரபிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 4 சிறுவர்கள் 13 வயது சிறுமியை ஏமாற்றி கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுமியை மூன்று நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு நான்கு சிறுவர்களும் சிறுமியை ஊருக்கு அழைத்து வந்து அங்கு விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து சிறுமியை மீட்டு காவல் நிலைய பொறுப்பதிகாரி திலக்தாரி சராஜ் சிறுமியை அவரது அத்தையுடன் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அவர் சிறுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு சிறுமியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிறுமி மீண்டும் குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஒரு ஆலோசனையின் போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகள் நல காப்பகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் காவல் நிலையப் பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகார் அளிக்கச் சென்ற சிறுமியை காவல் நிலையத்தில் வைத்த காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.