மாணவனை அடித்து கொலை செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவுரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாபோண்ட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நிகில் குமார் என்ற தலித் மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வின் சிங் தேர்வு நடத்தியுள்ளார். அதில் நிகில் குமார் சரியாக எழுதவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் சிங் நிகில் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிகில் குமார் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் நிகில் குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி நிகில் குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் அஸ்வின் சிங்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் சிங்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அதிகாரிகள் அஸ்வின் சிங்கை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.