தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர் அருகே தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையிலான சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னூர் பகுதியில் சாலை வளைவாக இருந்தது. இந்த சாலையை நேராக மாற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விரிவாக்க பணியின் போது சாலையில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவே வைத்துவிட்டு தார் சாலை போட்டிருக்கின்றனர். இந்த மின் கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் விபத்து நடப்பதற்கு முன்பாக மின் கம்பிகளை மாற்றி வைக்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை கொடுத்துள்ளனர். மேலும் மெத்தனமாக சாலை அமைத்த ஒப்பந்ததாரரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் தார் சாலை அமைக்கும்போது அடி பம்பை சாலையின் நடுவே வைத்ததால் பெரும் சர்ச்சையாகி ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.