கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தினோம் என்று ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமான முறையில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நடந்தது. அக்கடத்தலில் ஈடுபட்ட தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன் பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் இத்தகைய கடத்தலில் கைதாகி இருக்கின்றனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர் இருவரையும் அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்வப்னா-வின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கின்ற ஸ்வப்னா சுரேஷின் தனி லாக்கரில் ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனடிப்படையில் ஸ்வப்னாவை மேலும் விசாரணை மேற்கொண்டபோது பல புதிய தகவல்கள் வெளியாகின. அதில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் உதவி மூலமாக தங்கம் கடத்தப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதுமட்டுமன்றி கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லக்கூடிய கன்டெய்னர்கள் மூலமாக பணம் நகை ஆகியவை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இத்தகைய கடத்தலில் தொடர்பு கொண்டிருப்பதால் விசாரணையானது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது.