திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து நிலைதடுமாறி வேனின் மீது மோதியதில் 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே தனியாருக்கு சொந்தமான மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு வேலையாட்கள் தினந்தோறும் வேனில் செல்வது வழக்கம். அதேபோல் 20 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலையில் வேன் மில் நோக்கி சென்று கொண்டிருந்தது. வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேனை ஓட்டி சென்றுள்ளார். வேன் சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு தேனி நோக்கி திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டயர் வெடித்ததில் நிலைதடுமாறிய பேருந்து மில் வேனின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
மேலும் வேனுக்குள் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் வேகமாக மோதி உள்ளனர். இதில் வத்தலக்குண்டு தெருவை சேர்ந்த சுகுணா, வேனை ஓட்டி வந்த டிரைவர் சுரேஷ், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், வத்தலகுண்டு அண்ணாநகரை சேர்ந்த லதா ஆகிய 4 பேரும் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் வேனுக்குள் இருந்தவர்கள் எழுப்பிய கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வேனுக்குள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 15 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் இரண்டு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் அந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த சுரேஷ், காளிதாஸ், ஆகிய 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மில் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.