சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கோவில் திருவிழாவிற்கு சென்ற டிரைவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் ராஜா (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். ராஜா கதிரறுக்கும் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி இடையவலசை கிராமத்திற்கு கணவன்-மனைவி இருவரும் விருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது மடத்தூரணி கண்மாயில் ராஜா, தனது உறவினர்கள் மற்றும் மைத்துனருடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ராஜா நீண்ட நேரமாக நீரில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார். அதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் ராஜாவின் தந்தை செல்லச்சாமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.