நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானத்தில் மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (18) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவருமே மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சந்துரு மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். வேதாரண்யம் புதுபள்ளி எடை மேடு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் கலைச்செல்வன், சந்துரு ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்துரு சிகிச்சை அளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். கலைச்செல்வன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வேட்டைகாரனிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.