தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார்.
வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாள் என்றும், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளன. இந்த அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. இதனால் மார்ச் 7 இல் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு, மார்ச் 14 இல் நடைபெற இருந்த திருச்சி மாநாடு ஒத்திவைகப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.