சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிடுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தார்போல் பத்து ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதி 2019க்கு தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி ஒப்புதல் தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்டு குப்பை கட்டுவதற்கான கட்டணம் வசூல் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.