திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வலைஎடுப்பான் குளத்தில் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வலைஎடுப்பான்குளம், புகையிலைபட்டியில் உள்ளது. இந்த குளம் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. இதனால் கிராம மக்கள் அந்த குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் குளத்தில் தற்போது தண்ணீர் வற்றி கொண்டிருக்கிறது. மேலும் குளத்தில் விடப்பட்ட மீன்களும் பெரிதாகி விட்டன. இதனால் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இது குறித்த தண்டோரா புகையிலைப்பட்டி கிராமத்தில் போடப்பட்டது.
இதையடுத்து புகையிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அதன் பின்னர் கிராம மக்கள் அனைவரும் குளத்துக் கரையில் உள்ள கொக்கி அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். அதன்பிறகு குளத்தில் இறங்கி மீன்களை சிறிய வலைகள் மூலம் பிடித்தனர். இதனால் மீன்பிடி திருவிழா களைகட்டியது. ஒருவருக்கொருவர் உற்சாகமாக போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். ரோகு, கெண்டை, கட்லா, குறவை ஆகிய மீன்கள் சிக்கின. அவற்றை கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டனர்.