உக்ரைனில் இருந்து ருமேனியா எல்லைக்கு சாலை மார்கமாக வந்த இந்தியர்கள் அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சம், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதனை தொடர்ந்து உக்ரைன் தனது வான்பகுதியை மூடி விட்டதால் மீட்பு விமானங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவு அமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ருமேனியா எல்லைக்கு சாலை மார்கமாக வந்த இந்தியர்கள் அதிகாரிகள் மூலம் அங்கு உள்ள புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஏர்-இந்தியா சிறப்பு விமானங்கள் உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களை மீட்பதற்காக இயங்கி வருகிறது. இந்த வகையில் ஏர் இந்தியா விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணி அளவில் புறப்பட்டது. இந்த விமானம் காலை 10 மணி அளவில் புகாரெஸ்ட் நகரத்திற்கு வந்தடைந்தது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள 219 இந்தியர்கள் சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்டனர். அவர்களை ஏற்றி ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று இரவு 9 மணி அளவில் மும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.