ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்கள் செல்ல மகனின் எதிர்காலத்திற்கு கூட நீங்கள் சேமிப்பினை தொடங்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 8.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது. தங்கள் மகனுக்கு கணக்கு தொடங்க விரும்பும் பெற்றோர்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் கணக்கை திறக்கலாம். அந்த கணக்கை தமிழ்நாடு முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் டிரான்ஸ்பர் செய்து கொள்ள முடியும். குழந்தை பத்து வயதுக்கு மேல் இருந்தால் அந்த குழந்தையின் பெயரிலேயே நீங்கள் கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இணைப்பு கணக்கு தொடங்க வேண்டும் .அதாவது பெற்றோர் பெயரிலும் குழந்தைகள் பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும்.
குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி, ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு கணக்கு தொடங்க முடியும். நடப்பில் எவ்வளவு வட்டி விகிதம் உள்ளது என்பதை அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தெரிந்துகொள்ள முடியும். பணத்தை முன்கூட்டியே எடுக்க விரும்பினால், முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் செலுத்திய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் அதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும். இந்த திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு கிடைக்கிறது.