பங்குச்சந்தை விவகாரங்களை கசிய விட்டது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டது இந்தியாவை தாண்டி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பங்குச்சந்தை தலைமை அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும் அந்த சாமியாரின் பேச்சைக் கேட்டு ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை பங்குச் சந்தையின் முக்கிய அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் செபி கூறியிருந்தது.
இதுதொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவின் ஈமெயில் குறுஞ்செய்திகள் கண்காணிக்கப்பட்டு சித்ரா ராமகிருஷ்ணா கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே முன் ஜாமீனுக்கு கேட்டு சித்ரா ராமகிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவருடைய முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆனந்த் சுப்பிரமணியமும் கைது செய்யப்பட்டார். ஆனால் ஆனந்த் சுப்பிரமணியத்தின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறாத காரணத்தினால் அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி அவருடைய வழக்கறிஞர் தொடர்ந்து வாதிட்டார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஏற்கனவே ஆனந்த் சுப்ரமணியம் தான் இமயமலை சாமியார் என சிபிஐ தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.