இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகின்றார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறையினரால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், தனது கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட பெண் நீதிபதி ஆகியோரை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அவரது உரை நாடு முழுவதும் செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், இம்ரான்கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள், நீதிபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் முன் ஜாமின்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இம்ரான்கானுக்கு வரும் 25- ஆம் தேதி வரை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், முன் ஜாமின் காலமான 25-ஆம் தேதி நிறைவடைந்த பின்னர் இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசியலில் உச்சபட்ச பரபரப்பு நிழவி வருகின்றது.