இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டம், நக்ரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளம் பெண் கடந்த 30ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.