தண்ணீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தில் குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குமாருக்கு சொந்தமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை இறையுமன்துறை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த படகுகளில் புதுச்சேரி பனித்திட்டு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உட்பட 5 பேர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் என 8 பேர் தங்கியுள்ளனர். கடந்த 17-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக முத்துகிருஷ்ணன் படகிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதனை அடுத்து தண்ணீரில் மூழ்கிய முத்துகிருஷ்ணனை சக தொழிலாளர்கள் தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேற்று காலை படகுகளுக்கு இடையே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய முத்துக்குமாரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.