கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளக்கோடு, மேக்கோடு, பொன்மனை, வேளிமலை போன்ற கிராமங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாய நிலங்களும், நீர் ஆதாரங்களும் செழிப்பான முறையில் இருக்கின்றது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து இருப்பதால் இந்த மலைப் பகுதிகளை உடைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்த பகுதிகளில் மலைகள் உடைக்கப்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்ட மலைகளை அளவீடு செய்து அதற்கான உரிய நஷ்ட ஈடு வாங்க வேண்டும் எனவும், வெளிமாநிலங்களுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.