நாட்டில் விவசாயம் செய்பவர்களின் நிலை காலம்காலமாக மாறாமல் அப்படியே இன்றும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்து பார்த்தால் விவசாயிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். அவ்வாறு தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார். அப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி, இன்றைக்கு பல லட்சங்களை வருமானமாக ஈட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயம் மூலம் வருமானம் ஈட்ட முடியாது என்ற கூற்றையும் மாற்றிக் காட்டியிருக்கிறார். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒபுலயப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஒரு மூன்றாம் தலைமுறை விவசாயி. விவசாய குடும்பத்தை சார்ந்த இவர், பட்டம் முடித்து ஆசிரியர் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அது சரி வராததால், தனது ஆசையை தூக்கி எறிந்த நாயுடு, தாத்தா, தந்தை வழி தொழிலான விவசாயத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதையடுத்து மற்ற விவசாயிகளைப் போன்று அல்லாமல் ரசாயன உரங்களை பயன்படுத்தி தக்காளி, மிளகாய், தர்பூசணி, கொய்யா, பப்பாளி ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார்.
ஆனால் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு அது போதுமானதாக இருந்துள்ளது. இதற்கிடையே அவர் தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தி வந்ததால், விளைநிலமானது அதன் வலிமையை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாயி மாருதி, விவசாய உபகரணங்கள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.
அதன்பின் அதை சரியாக கட்ட முடியாததால், கடன் பிரச்சினை ஏற்பட்டு மிகவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார். அதன்பின் அவர் விவசாயத்தில் மாற்று வழியை தேடியுள்ளார். அப்போதுதான் Zero Budget Natural Farming (ZBNF) என்ற விவசாய முறையை குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது. உடனே அதை பற்றிய பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அதன் மூலம் அந்த விவசாய முறையை நன்கு கற்று அறிந்துள்ளார். அதன்பின் இந்த இயற்கை விவசாய முறையை குறித்து தனது குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறியுள்ளார். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இயற்கை விவசாயம் வருமானம் கொடுக்காது என கூறி வந்தனர்.
ஆனால் மாருதி நாயுடு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தனது விளைநிலத்தின் ஒரு பகுதியில் இயற்கை விவசாயத்தை சோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளார். அப்போது அதில் நல்ல விளைச்சல் கிடைக்கவே கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை விவசாயத்தை பெருக்கினார். தற்போது அவர் 9 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து, வருடத்திற்கு 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார். அதுமட்டுமன்றி அவரிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கும் தனது விவசாய நுணுக்கங்களைப் பற்றி கற்றுக் கொடுத்து வருகிறார்.