Categories
விவசாயம்

இயற்கை விவசாயத்தை மீண்டும் முன்னெடுக்க…. இதோ சில டிப்ஸ்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

விவசாயத்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வரும் சூழல் தெரிகிறது. அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினை முன்னெடுத்துச் செல்லும் முயற்சி முதல்வரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. மண்ணின் வளமே மக்கள் வளம் என்று பசுமை தாரக மந்திரத்தை முதல்வர் உச்சரிப்பது வரவேற்புக்குரிய செயல் ஆகும். இதனிடையில் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தைத் முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலனை கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனைகளை முன் வைக்கிறேன். அதாவது இயற்கை விவசாயத்தைத் தீவிரமாகத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டுமெனில், அதற்காகத் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

இதையடுத்து இயற்கை விவசாயத்திற்கு என தனியே இயற்கை விவசாயக் கொள்கையையும் உருவாக்க வேண்டும். அதன்பின் விவசாயிகளின் அறிவு, தமிழ்நாடு விவசாயப்பண்பாட்டின் முறையில் இருக்க வேண்டும். வேளாண் துறையிலுள்ள அலுவலர்களுக்கு இயற்கை விவசாய வழிமுறைகள் குறித்தும், அதன் அறிவியல் தொடர்பாகவும் முறையான களப்பயிற்சி கொடுக்க வேண்டும். மேலும் வேளாண் விரிவாக்கத்தில் அனுபவ விவசாயிகளைப் பயன்படுத்தும் முறையை உருவாக்க வேண்டும். விளைப்பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப் பயிற்சி கொடுக்க வேண்டும். அத்துடன்  பயிற்சி மையங்களைப் பரவலாக்க வேண்டும். பல பயிர்களுக்கு ஏற்றாற்போல் சிறு கருவிகளை உருவாக்க வேண்டும். சூரியஒளி மின்சாரம் வாயிலாக ஒவ்வொரு கிணற்று மேட்டையும், வீட்டின் மாடி, கூரையையும் மின் உற்பத்தி நிலையமாக மாற்ற முடியும்.

அதனை அரசு முன் எடுக்க வேண்டும் எனவும் உள்ளாட்சிகள் தங்களுக்கான விவசாயக் கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அதன்பின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் சந்தைகளை அமைக்க வேண்டும். அடுத்ததாக விவசாயிகளின் கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்யும் அடிப்படையில் இணையதளத்தினை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பாரம்பர்ய விதைகள் குறித்த அறிவை அதிகப்படுத்தி, அதை பரவலாக்கம் செய்ய வேண்டும். உள்ளாட்சிகளில் பராமரிக்கப்படவேண்டிய உயிரினப் பன்மய பதிவேட்டில் பாரம்பரிய விதைகளும் பதிவு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி விதைக் கிராமங்கள் உருவாக வேண்டும். அதனை தொடர்ந்து உள்ளாட்சிகளின் கழிவுகளை உரமாக்க பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அதிகமான இடங்களில் பண்ணைக்குட்டைகள் வெட்டி மழைநீர் சேமிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் மழைநீர் ஓடைகளை உயிர்ப்பித்து 3 மாதங்களாவது தண்ணீர் ஓடச் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டப் பணியாளர்களை விவசாய வேலைகளுக்கு முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாரம்பரிய பயிர்வகையிலும் இயற்கை விவசாய விளைச்சல் போட்டிகளை மாவட்டம், மாநில அளவில் நடத்த வேண்டும். மேலும் விதை, உணவுத் திருவிழாக்கள் அதிகளவில் நடத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள பி.டி பருத்தி தவிர்த்து வேறு எந்தப் புதிய பயிர்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கு இடமில்லை எனவும் வயல்வெளியில் சோதிக்க அனுமதி இல்லை எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனை ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இயற்கை விவசாயம் பண்ணைகளின் தரஅளவை அறிவதற்கான இணையதளத்தையும் அரசு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |