Categories
விவசாயம்

இயற்கை விவசாயம்…. எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…. களைய வேண்டிய தீர்வுகள்….!!!!

இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு இயற்கை வேளாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 27.8 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பில் மட்டுமே இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாட்டில் மொத்தம் 1401 லட்சம் ஹெக்டேர் நிகர விவசாய பரப்பில் இது 2 சதவீதம் ஆகும். இந்நிலையில் இயற்கை விவசாயத்தில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதில் சிக்கிம் மட்டும் முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் விவசாயத்திற்காக ஒரு சிறிய அளவு நிலத்தினை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே அதிக பரப்பில் இயற்கை விவசாயத்தை செய்து வருகிறது.

தற்போது ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், உத்திரகண்ட், கேரளா, ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, குஜராத் தெலுங்கானா, உத்திரபிரதேசம் போன்ற 12 மாநிலங்கள் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கரிம சான்றிதழ் முகாம்களைக் கொண்டுள்ளது. இயற்கை வேளாண்மை செய்யும் நிலப்பரப்பு இந்தியாவில் குறைவாக இருந்தாலும் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் தற்போது 19 லட்சத்திற்கும் அதிகமான இயற்கை விவசாயிகள் இருக்கின்றனர். தனது நிலத்தை ஒரு விவசாயி இயற்கை விவசாயத்திற்கு மாற்றும் போது மகசூல் ரீதியான நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் பிரிட்டன் போன்ற பல நாடுகள் இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பீட்டிற்கு மானியங்கள் வழங்குவதற்கான அறிவியல் செயல் முறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்ற மானியங்கள் இந்தியாவில் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக இயற்கை விவசாயத்திற்காக இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களுக்கு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது.

உலக அளவில் பல நாடுகள் இயற்கை விவசாயம் செய்யும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குகிறது. இந்தியாவில் அத்தகைய ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் தரமான இயற்கை உரம் பற்றாக்குறையாகவே உள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சந்தையில் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல போலியான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரங்களை பயன்படுத்துவதன் மூலம் பயிர்களை பூச்சிகள் தாக்குதல் மற்றும் மண்ணின் தரம் குறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது. எனவே வேளாண்மைத் துறை இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை செய்யும் மலை கிராமங்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் தங்கள் விவசாய பயிர்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் விலை பொருட்கள் வீணாகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த நிலையான திட்டம் ஏதும் இல்லாததால் இடைத்தரகர்கள் லாபம் அடைகின்றனர். எனவே அரசாங்கம் நிலையான கண்காட்சியை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் நிலையான வேளாண் சந்தையை உருவாக்க வேண்டும். மேலும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக அந்தந்த பகுதிகளில் விவசாய குழுக்கள் அமைத்து அவர்களுக்கான கொள்கைகளை அறிவியல் ரீதியாக உருவாக்க வேண்டும்.

Categories

Tech |