தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று தீவிரமடைந்து வந்ததால் அந்த மாவட்டங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மண்பானை விற்பனை செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏனெனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களும் வெயில் காலம் என்பதால், வெயில் காலங்களில் தான் குடிநீர் மண்பானை அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இந்த சமயங்களில் தான் மண்பானை விற்பனை செய்பவர்களுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைப்பதுண்டு. ஆனால் அதுவும் கிடைக்காததால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், கொரோனா காலத்தில் குடிநீர் பானை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதன் காரணமாக மண்பானை தொழில் மெதுமெதுவாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கொரோனா என்ற கொடிய நோய் ஒழியும் வரை நிரந்தரத் தீர்வுக்கு அரசு வழி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.