தவறு எங்கு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் நடந்து முடிந்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது போட்டி கடந்த 20-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 34 (31), சூரியகுமார் யாதவ் 65 (31), வெங்கடேஷ் ஐயர் 35 (19) ஆகியோர் சிறப்பாக விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184/5 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் நிக்கோலஸ் பூரன் 61(47) மட்டுமே சிறப்பாக விளையாடி உள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 167/9 மட்டும் எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 16-வது ஓவர் முதல் வெறித்தனமாக விளையாடி, கடைசி 5 ஓவர்களில் மட்டும் (17, 17, 10, 21, 21) மொத்தம் 86 ரன்கள் எடுத்தனர்.
இதுதான் மேற்கிந்திய தீவுகள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் இப்போட்டியின் முடிவில் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் கூறியதாவது, டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததால் தோல்வியின் முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்தார். முதல் 15 ஓவர்கள் வரை போட்டியானது எங்கள் கையில் தான் இருந்தது. அதன்பின் அடுத்த 5 ஓவர்களில் 86 ரன்கள் அடிக்க விட்டது எங்கள் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மேலும் பேசிய அவர், நிகோலஸ் பூரன் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவுடன் விளையாடுவது சவாலானது தான் என்று தெரிந்தும் களமிறங்கினோம். எங்கள் அணி வீரர்களும் முடிந்த அளவு கடினமாக உழைத்து உள்ளனர். ஒருநாள் தொடரின் கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் 230 ரன்களுக்குள் இந்தியாவை ஆல்-அவுட் செய்துள்ளோம். பேட்ஸ்மேன்களும் பௌலர்களும் முடிந்த அளவுக்கு தங்களது அனைத்து பங்களிப்பையும் வழங்கினார்கள். ஆனால் எங்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்து, இனி நடக்க இருக்கும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என தெரிவித்துள்ளார்.